Thursday 7 June 2012

பொய்யோடு ஒரு கிராமத்தின் காதல் !

ஒரு பொய்யும்,சில சொர்க்கங்களும்
மரக்குதிரை பயணம்
சேற்று வயல் நீர் குளியல்
கூட்டாஞ்சோறு சமையல்
வரப்பு நடை உயிர்ப்பு
... தேன்குழலில் நாத்தேய்ப்பு
கொலுசோடு குதிப்பு
மிதந்து மின்னிய கிராமத்து
கூரைவழி நட்சத்திரங்கள்
நகரத்து கானற்பூக்கள்
இவற்றை காணடித்த
பின்னும்
இவ்வாழ்க்கை சொர்க்கம் என நாம்
குறிக்கிற பொழுது
சிரிக்கின்றாள்
சிறுமி ...
அந்த சிரிப்பில் பொய்ப்பெண்
நாணி ஒளிகிறாள் காலக்கூட்டில்

உழைப்பவனின் கல்லறை அல்ல இது !

உழைக்கின்றவனின் ரத்தம் கேட்டார்கள்
அதன் மீது ஒப்பந்தம் என்றார்கள்
கல்லில் கரைந்து போனவனின் கரங்கள் கேட்டார்கள்
அதில் கீதம் இசைக்கப்போவதாக
குழைந்தார்கள்
... வியர்வை சிந்தியவனின் காப்புகளை கேட்டார்கள்
அதில் வலியின் ஓவியம் வரையப்போவதாக வாக்குறுதி தந்தார்கள்
தூக்கத்தின் நடுவேயும் கவலைகள் தாங்கும் அவனின் தூக்கம் சுமக்கும் அவனின்
இதயம் கேட்டார்கள் அருங்காட்சியகம் அமைக்க போவதாக சொன்னார்கள்
யார் நீங்கள் என கேட்டேன்,"அரசாங்கம் !"என்றார்கள்
நான் எனக்கு பேச வராது என்று மௌனித்து காற்றோடு கலந்துப்போனேன்

கல்லூரி கிறுக்கல்கள்

எங்கள் கல்லூரி சீனியர்களின் பொழுதுகளை வெவ்வேறு தருணங்களில் குறித்து இருந்தேன் அவற்றின் தொகுப்பு இது !

கடைசி சொற்கள் ஒவ்வொரு இடத்திலும் முக்கியத்துவம் பெறுகின்றன இல்லையா ?மாபெரும் இசைகலைஞன் எல்விஸ் பிரிஸ்லீ "நான் உங்களை மகிழ்வாகவே வைத்து இருந்தேன் என நம்புகிறேன் !"என்ற பொழுது அவனின் இசையின் இளமை வேகம் அதில் தெரிகிறது ;மாபெரும் போராளி மால்கம் எக்ஸ் "சகோதரர்களே அமைதியாக இருங்கள் !"என சொன்னபொழுது மரணம் துப்பாக்கி முனையில் அவனை நெருங்குகிறது என அவனுக்கு தெரியும் ;வறுமையிலேயே சாவை நெருங்கிய ஓ ஹென்றி"விளக்கை போடுங்கள் !நான் என் சொந்த தாய்வீட்டிற்கு போகும் பொழுது இருட்டாக இருக்கலாமா ?"என ஆவல் தொனிக்க கேட்டதை என்ன என சொல்வது ?கடைசி வார்த்தை என்பது எதையும் சொல்லாத முட்டாள்களுக்கு தான் !எனக்கில்லை வெளியேறுங்கள் மூடர்களே!" என்ற மார்க்சின் அளவில்லா சிந்தனைப்பெருக்கின் உச்சத்தை நினைத்து நினைத்து வியக்கிறேன்.என் கேள்வி எல்லாம் மரணத்தை விடுங்கள்,கல்லூரி கடைசி நாளில் . உங்கள் உற்றவர்களிடம் உங்கள் இறுதி வார்த்தை என்னவாக இருக்கும் .இருந்து இருக்கிறது ?"போய் வருகிறேன் என்றா ?"..."என்னால முடியலைடா" என்றா ,"மச்சான் மறந்துடாதே" என்றா ?"அழாதே" என்றா எது எது ?


ஏற்கனவே கல்லூரி கடைசி நாளும் கடவுளின் திரும்பி பார்த்தலும் கவிதை படித்து கண்ணீர் விட்டோம் என என்னுடைய சீனியர்கள் பலர் சொன்னார்கள்;இந்த நிலையில் பிரியப்போகும் நட்பில் என்னவெல்லாம் சொல்லாமல் விட்டு விடுவோம் என எண்ணி நான் எழுதிய இந்த புதுக்கவிதையால் இன்னமும் பலரின் கண்கள் கலங்கி இருப்பது புரிகிறது அவர்களின் குறுஞ்செய்திகளில் !அழுங்கள் ...இனி இதை எல்லாம் காண எங்களுக்கு கொடுப்பினை கிடையாதே !அன்பிற்காக அழுதல் ஆனந்தம் !அதிலும் அதை எழுதுபவனுக்கு பேரானந்தம் ...நான் இதை சாவகாசமாக எழுதிவிட வில்லை ஜெயகாந்தன் ஒரு வரி எழுதி இருப்பார் சில நேரங்களில் சில மனிதர்களில் ,"ஒரு கதாப்பாத்திரத்தை சாகடிக்கிற பொழுது கதாசிரியன் மற்ற எல்லாரையும் விட அதிகம் கதறி இருப்பான்!".அதே தான் என் நிலையும் !

அழகான பல அனுபவங்களை கடைசி கல்லூரி நாட்கள் எல்லாருக்கும் பரிசளிக்கிறது !இரவில் கிரிக்கெட் விளையாடும் சீனியர்களை காரணம் கேட்க முடியவில்லை ;அவர்களின் இறுதி சில பொழுதுகள் அல்லவா இவை ?சுரங்கவியல் துறையில் சமீபத்தில் நடந்த சம்பவம் நெஞ்சை உருக வைத்து விட்டது.ஸ்ரீனிவாசன் எனும் மூத்த பேராசிரியர் அவர்.ஒற்றை பார்வையாலே பயத்தை விதைப்பவர் என்கிற அளவிற்கு கெடுபிடிக்காரர் எனப்பெயர் எடுத்தவர்.அவர் சொல்கிற வார்த்தைகள் தவறை உருவி எடுத்து கையில் கொடுக்கும்.FAREWELL கொடுக்கப்பட்ட பொழுது அவரும் வந்து இருக்கிறார்.தன் பிள்ளைகள் போன்ற கடைசி ஆண்டு பிள்ளைகளுக்கு தன் கையால் கேக் எடுத்து ஒவ்வொருவருக்கும் அவ்வளவு வாஞ்சையோடு ஊட்டி இருக்கிறார்.அதையே மூன்றாம் ஆண்டு பிள்ளைகளுக்கும் செய்து இருக்கிறார்.மென்மையாக தட்டிக்கொடுத்த பொழுது அந்த கரடுமுரடான மனிதருக்குள் இருக்கும் நெகிழ்வு தெரிந்து இருக்கிறது .பலரின் கண்கள் கலங்கிய பொழுதும் அதே கம்பீரப்பார்வை அன்பு கனிந்த பார்வையாக பாய்ந்து இருக்கிறது.#உலகம் சுழல்வதற்கு ஆயிரம் காரணங்கள் அறிவியல் சொல்லலாம் ,ஆனால் அன்பே காரணம் என்பேன் நான் !

 அன்பான ஒரு நாள் இன்றைக்கு !நான் எப்பொழுதும் மனதுக்கு இணக்கமானவர்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பதற்கு முன் அதை முழுதும் வசித்து அது அவர்களுக்கு தர உகந்ததா என பார்த்தே தருவேன் !அப்படி இன்று புத்தகத்தை பரிசளித்த அண்ணன் ரொம்பவே ஸ்பெஷல் !நாங்கள் எப்பொழுது பேசினாலும் அதில் தீப்பொறி பறக்கும் !ஆனால் அதில் வன்மம் இருக்காது !திடீர் என ஒரு நாள் ,"நீ ரொம்ப நல்ல பையன்டா!நாங்க அப்பப்ப பிரெண்ட்ஸ் பேசிக்கிட்டு இருக்கப்ப நீ வந்தா கோவம் வந்துடும் அவ்ளோ தான் ...ஹர்ட் பண்ணி இருந்தா சாரி !"என்றார்.இது போல ஒரு பத்து சீனியர்கள் சொல்லி விட்டார்கள் !ஆனால் உண்மையில் இவர்கள் யார் மீதும் எனக்கு எவ்வகையான வெறுப்பும் ஏற்பட்டது இல்லை !எல்லோரும் அன்பின் உச்சங்கள் !அதை வெளிப்படுத்துவதில் தான் சிக்கல்.அது எல்லாருக்கும் உள்ளது தானே !எல்டொராடோ எனும் சுஜாதாவின் கதையில் பல வருடம் கழித்து மரணப்படுக்கையில் இருக்கும் தந்தையின் கரம் பதித்து எட்டு வருடம் பிரிந்துபோன மகன் கண்ணீர் மல்க பேசுவான் !தந்தை நிம்மதியாக உயிர் விடுவார் !இந்த கல்லூரியின் மீது உள்ள பந்தம் என்றைக்கும் அற்றுப்போய் விடக்கூடாது என இவர்கள் படுகிற அக்கறை என்னை மலைக்க வைக்கிறது .அந்த தந்தையின் மறைவை போல தான் இவர்களின் கல்லூரி கடைசி நாள் அமையும்,இல்லையா ?

இதை விட நீண்ட நெடிய உரைகளை .இதை விட பத்துமடங்கு பெரிய கூட்டத்திடம் உரையாற்றி இருக்கிறேன் !ஆனால் இன்றைக்கு என் துறை சீனியர்கள் முன் பேசிய ஏழு நிமிடத்தை போல நிறைவாக வெகு சில கூட்டங்களில் உணர்ந்து இருக்கிறேன்.இன்றைக்கு பிரிவு உபசார விழாவின் பொழுது ஒவ்வொருவரின் கண்ணிலும் பிரிவின் சாயல் சத்தமில்லாமல் படர்ந்தது,விளையாட்டுகள் நடந்த பொழுது தோற்றவரும் ஜெயித்தவரும் இல்லாத சமநிலை அவர்கள் முகத்தில் குடிகொண்டுஇருந்தது,கிண்டலடிக்கும் ஒளிக்கோர்வை படர்ந்த பொழுது அதன் ஏளனம் அவர்களை ஏகாந்தம் போல தாக்கியது அவர்கள் முகத்தில் தெரிந்தது ,தங்கள் தோழமைகள் பற்றி சொல்லும் பொழுது அவர்கள் எவ்வளவு குமுறி இருப்பார்கள் என புரிந்தது ,பலர் வார்த்தைகள் இல்லாமல் அவதிப்பட்டாலும் அவர்களின் மொழி அனைவருக்கும் புரிந்தது புதுமை ,என் கவிதை அவர்களின் கண்ணீரில் மேலும் புனிதம் அடைந்தது ,இறுதில் மெழுகின் ஒளியில் நட்பின் பாடல்களில் அவர்கள் அழுது எங்களை தழுவிக்கொண்ட பொழுது இப்படி ஒரு பிரிவு உபசார விழா வேறு யாருக்கும் எங்கள் கல்லூரியில் வாய்த்து இருக்காது என எங்களுக்கு புரிந்தது ;பலர் கைகுலுக்கிய பொழுது இல்லாத யார் மீதோ கோபம் கோபமாக வந்தது !ஒரு வேளை அவர்கள் நம்பும் கடவுள் மீதாக இருக்கலாம்

அண்ணனிடம் அளித்து இருந்த ஸ்லாம்புத்தகம் வெகுநாட்கள் கழித்து தான் என் கைகளுக்கு வந்து சேர்ந்தது !அதில் என்னைப்பற்றி அச்சுப்பிசகாமல் அவ்வளவு அழகாக எழுதி இருந்தான் !எனக்கு ஆச்சரியம் ஒரே பாசிடிவ் ஆன தகவல்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது அதில் !காரணம் கேட்ட பொழுது,:கல்லூரியை விட்டு போகப்போகிறோம் !எதுக்காக யார் மனதையும் புண்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும் !வாழ்க்கையில மறக்க முடியாத திரும்பவே வராத கட்டம் இதுடா!ரொம்பவே மிஸ் பண்ணபோறோம் இதை எல்லாம் !"என்றார்.ஒவ்வொரு ஸ்லாம்புத்தகத்திலும் என்ன எழுத எண்ணி இருப்பார்கள் கல்லூரியை விட்டு பிரிகின்ற நண்பர்கள் !அவர்களின் நட்பிற்கு நன்றியா,பிரிவின் கண்ணீரை சொல்லும் சோக வரிகளையா?திரும்பவே வராத ஓசி வாழ்க்கையா?இந்த பருவத்தின் மிச்சங்கள் என்றைக்கும் பழுப்பேறிப்போன ஸ்லாம்புக்கை போல அழகானதாக,ரம்மியமானதாக,சலனப்படுத்த போகிறது !கல்லூரி கடைசி நாள் சொர்க்கத்தின் இறுதி நாள்,அவர்கள் சொல்லாமல் விட்டதை அந்த வெறுமையான தாள்கள் சொல்லுமோ என்னமோ #ஸ்லாம்புக் சோகம்

டிகிரி வாங்கிக்கொண்டு மஞ்சள் உடை அணிந்து கொண்டு பல்வேறு படங்களுக்கு போஸ் கொடுத்தப்பொழுது அருகில் இருந்த நான்காமாண்டு அண்ணன் ஒருவர் அடித்த கமென்ட் இன்னமும் எதிரொலிக்கிறது ,"இந்த ஒத்தை தாளோடு இந்த கல்லூரிக்கும் உனக்கும் உள்ள தொடர்பு அந்து போச்சுன்னு சொல்றாங்க இல்ல ?"என கேட்ட பொழுது அடுத்தது நாங்கள் அதற்கடுத்தது நீங்கள் என அவரின் மனம் உள்ளுக்குள் சொல்லிக்கொள்வதாகபட்டது எனக்கு .எவ்வளவோ உறவுகளை கடந்த போனாலும் கல்லூரியும் நம் நண்பர்களில் ஒன்றாக இருந்து இருக்கிறது.எத்தனை நட்புகளை இமைக்கொட்டாமல் கண்டு இருக்கிறது ,எத்தனை காதலர்களின் கைவருடல்களை வெட்கப்படாமல் கடந்து இருக்கிறது ,எத்தனை கத்தல்களை கதை பொத்தாமல் கேட்டு இருக்கிறது,கடைசியில் அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பை முறிக்கும் சோக தினத்தை எவ்வளவு கோலாகலமாக கொண்டாடுகிறோம் #முரண்

என்னவோ இப்போதெல்லாம் கண்ணில் படுபவை எல்லாம் மனதை பிசைகின்றன ...இன்றைக்கு மைதானத்தில் சீனியர்கள் கிரிக்கெட் ஆடுவதை பார்த்தேன் ...அதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா ?இது வரை ஸ்கோர் வைத்து கொண்டு ஆடிய புண்ணியவான்கள் இன்றைக்கு சும்மாவே ஓயாமல் விளையாடி கொண்டு இருந்தார்கள் ...."இன்னும் கொஞ்ச நாள் தானே மச்சி !அப்புறம் இங்க விளையாட முடியாதில்லே ?"என ஒருவர் கேட்ட கேள்விக்கு,தலையில் தட்டி சிரித்தார் மற்றொருவர் ..அது என்னமோ பிரிவின் உச்சபட்ச வெளிப்பாடாக பட்டது எனக்கு !


என் சீனியர்களின் வாழ்க்கையை பார்த்து வியக்கிறேன் கல்லூரியில் ...இறுதி ஆண்டுகளில் இருக்கிற பொழுது தங்களின் போதிமரங்கள் ஆன கல்லூரியின் பச்சை பெஞ்சுக்களில் பொழுதை கழிக்கிறார்கள் ...இரண்டே வகுப்புகள் இருந்தாலும் கல்லூரியை மீண்டும்,மீண்டும் வளம் வருகிறார்கள் ...அன்பை பரிமாறுகிறார்கள் ...கண்களில் கவலை பொங்க சிரிக்கிறார்கள்,கண்ணீரை மெதுவாக மறைத்து கொள்கிறார்கள் ...அவர்களை இந்த கல்லூரியின் கேலரிக்கள் இழந்து நிற்கும் ...farewell கலாசாரம் இந்த கல்லூரியில் இல்லாமல் இருக்கிறது ...ஆனாலும் ,நெகிழ்வும்,நட்பின் மிச்சங்களும் இவர்களிடம் கொட்டிகிடைக்கிறது ...அடுத்தது நீங்க தான் என சொல்லாமல் சொல்கிறதோ இவர்களின் கல்லூரி இறுதி நாட்கள் #நட்பும்,பிரிவும்

'தொலையாமல் தொலைந்தவர்கள்'

குற்றங்கள் இல்லா குழந்தைகளின் தெரு அது
சறுக்கி விழும் சேலையின் ஊடே சூரியனை தேடும்
விதிப்புகள் அவர்களுடையது
புள்ளிகளில்லா சிறுத்தைகள் நடமாடும்
வனங்களின் ராஜகுமாரர்கள் அவர்கள்
கண்ணின் மைத்துளியில் கரைந்து விடும்
தருணங்களை தவிராதவர்கள் அவர்கள்
சுழலும் ராட்டினங்களின் சகாக்கள்....
மின்மினிகளை மணலோடு
தோய்த்து விடும்
சாகசக்காரர்கள் அவர்கள்,
பிய்க்கப்படும் மயில் இறகுடன் ஆன காதல் அவர்களுடையது...
மௌனமாகவே நிகழ்கிறது
அந்த தெருவின் ஆக்கிரமிப்பு...
எங்கேயோ பூச்சாண்டிகளின் தர்பாரில் நடக்கிறதாம் வழக்கு..
குற்றங்கள் இல்லா குழந்தைகளின் தெரு அது ...
ஆகவே தீர்ப்பு வரும் போது
அந்த தெரு புரட்டப்படும்
பாடத்தாள்களின் சத்தத்தில் காணாமல் போய் விடும்

Thursday 11 November 2010

வாழ்க்கை வெல்வதற்கே

அன்பு மிகுந்த நண்பர்களே! வாழ்வில் எண்ணற்ற சாதனைகள் புரிய இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.ஒவ்வொரு நபரும் எப்போதும் வென்று கொண்டே இருக்க முடியாது.ஆனால் நிச்சயம் வெற்றி யாருக்கும் சொத்து கிடையாது .தோல்விகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால் நீ துவண்டு விடாதே,அவை நீ தோல்விகளை கடந்து வெற்றியை நோக்கி முன்னேறி கொண்டு இருக்கிறாய் என்பதற்கு சான்று .எடிசனை தெரியும் அல்லவா உங்களுக்கு? 'மென்லோ பார்க் மேதை' என போற்றப்பட்ட அவர் சந்திக்காத தோல்வியே கிடையாது.அவர் கண்டு பிடித்த மின்சார பல்பு இன்று உலகத்தை ஒளி  வெள்ளத்தில் மிதக்க வைப்பது உங்களுக்குத்  தெரியும் ஆனால் அதை  கண்டுபிடிக்க 10௦,000 ௦௦௦ முறை முயல வேண்டி இருந்தது.தோல்வி விடாமல் துரத்திய பொழுது துவண்டு விடாமல் போராடிய அந்த வீரரிடம் ஒரு கேள்வி வைக்கப்படது,'எடிசன்,இந்த 10,000௦ தோல்விகளினால் தாங்கள் என்ன பயன் கண்டீர்கள்?'என கேட்கப்பட்ட பொழுது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா ?'நான் தோல்விகளை தவிர்க்கும் 10,000  வழிகளை கண்டு கொண்டேன் !!!" என்றாராம். இதுவன்றோ தன்னம்பிக்கை.

             வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் வெல்வதற்கு சூழ்நிலை,திறமை,வாய்ப்பு என்கிற ரீதியில் பல தடைகள் வரலாம்.அவற்றை வென்றவர்களின் அற்புத கதைகள் உங்களை ஊக்கபடுத்தும் என்கிற அரிய நம்பிக்கை கொண்டு இந்த கட்டுரை எழுதப்படுகிறது .தீபிகா குமாரி என்கிற அற்புத சகோதரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் .காமன் வெல்த் போட்டியில் வில் வித்தையில் தங்க பதக்கத்தை வென்ற அந்த வெற்றி நங்கையின் அப்பா ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனர் .உண்ண உணவே கிடைக்காத குடும்பத்தில் எங்கே பயிற்சிக்கு வழி ?வெற்றி என்கிற அரிய பசி அந்த அற்புத நங்கையை ஆடி படைக்க மாங்காய்களை குறிவைத்து அடித்து பயிற்சி எடுத்து  ,எடுத்து வறுமையை மீறி வென்ற அந்த அற்புத மங்கையின் வாழ்க்கை,நமக்கெல்லாம் ஒரு உற்சாக டானிக்.
          பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்  என்னும் ஈடு இணை அற்ற தலைவனின் தலைமையின் கீழ் அமெரிக்கா  உலகப்  போரை வென்றது நமக்கு தெரியும் ஆனால் அவரின் வாழ்வு வேதனையும்,வலியும் நிறைந்தது என்பது தெரியுமா உங்களுக்கு ?அவர் பக்கவாதத்தால் சுயமாய் கால்களால் நடக்க முடியாத நிலையால் பாதிக்கபட்டு  சக்கர நாற்காலியில் வாழ்க்கையை ஓட்டியது கசப்பான உண்மை .ஆனால், அவர் காட்டிய தீரம் மெய் சிலிர்க்க வைப்பது .அமெரிக்காவை பொருளாதார தேக்க நிலையில் இருந்து மீட்டு எடுத்து அவர் சாதனை புரிந்தார் ,ஜப்பான் பியர்ல் ஹார்பரில் அமெரிக்காவை நாசம் செய்த பொழுது ,'ஜனாதிபதியே,நாடு இனி மேல் எழவே முடியாது !" என  தளபதிகள் கண்ணீர் மல்க நின்ற பொழுது ,அவர் நிமிர்ந்து பார்த்து தடால் என்று முப்பது வருட முடக்கு வாதத்தை மீறி எழுந்து  நின்று தைரியம் பொங்க  சொன்ன வார்த்தைகள் மிக பிரபலம் 'நானே எழுந்து நிற்க முடியுமாயின் ஏன் நம்  நாட்டால் முடியாது ?"   சொன்னபடியே தன் நாட்டையே தலை நிமிர செய்தார் அவர் .ஆக, சூழ்நிலை ,இன்மை i உடல்குறைபாடு இவை எல்லாம் சாதிப்பதற்கு தடங்கல்  இல்லை அவை அற்புதமான தடங்கள்
                 உங்களை உலகம் எப்படி எடுத்து கொள்கிறது என கவலைக்  கொள்ளாதீர்கள் .நம்பக்  கடினமாக கூட இருக்கலாம்,மஹா கவி பாரதி உயிருடன்  இருந்த பொழுது அவர் எழுதிய 'செந்தமிழ் நாடெனும் போதினிலே ' எனும் கவிதை காரைக்குடி தமிழ் சங்கப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதாம்!!!முதல் பரிசு பெற்ற கவிதை  போன இடம் எங்கே?அந்த முண்டாசு கவி வாழ்ந்த காலம் அவனை நிராகரித்தாலும் ,வரலாறு அவனை வாரி அணைத்து கொண்டது எதைக் காட்டுகிறது?   இதை இன்னும் மிக அழகாய் பிடல் காஸ்ட்ரோவின் வார்த்தைகளில் சொன்னால் "முயலும் வரை வீண் முயற்சி என்பார்கள் ,வென்ற பின் விடா முயற்சி என்பார்கள் ".
                 எப்பொழுதும் தேவை நம் மீது நம்பிக்கை .'உன்னையே அறிவாய்' என சாக்ரடீஸ் சொன்னது இதைத்தான். அசாதாரணமான சூழ்நிலைகள் சாதாரணம் ஆனவர்கள் என கருத பட்டவர்களை மாபெரும் வீரர்களாக ஆக்கி இருக்கிறது  அப்படி பட்ட ஒரு இளைஞனின் கதை இதோ  
அவன் தினமும் கால் பந்து விளையாட மைதானத்திற்கு தன் தந்தை உடன் வருவான் .அவர் ஒரு ஓரமாய் உட்கார்ந்து இருக்கும் பொழுது அவன் பள்ளி போட்டிகளில் விளையாடுவான் ."அவன் ஒன்றும் குறிப்பிட தகுந்த விளையாட்டு திறன் உள்ளவன் இல்லை "எனவே, அவனின் பயிற்சியாளர் நம்பினார் அவன் substitute ஆகவே விளையாடி வந்தான் முக்கியமான போட்டிகளில் அவனை அவர் விளையாட விட மாட்டார் .அங்கே அவன் பள்ளியில் ஒருமுக்கியமான கோப்பைக்கான போட்டி வந்தது அந்த இளைஞனின் அணி அரை இறுதி  வரை கலக்கோ கலக்குவென கலக்கி இறுதி போட்டிக்கும்  முன்னேறி விட்டது .ஆனால்,அந்த போட்டியின் முதல் பாதியில் ௦-0-3 என பின் தங்கி இருந்த பொழுது ,நம் நாயகன் பயிற்சியாளரை நோக்கி போனான் ,'மாஸ்டர் நான் விளையாடட்டுமா? 'என  கேட்ட பொழுது ,'"முடியாது தம்பி நீ இது வரை சரியாக ஆடியது கிடையாது !"என்ற பொழுது, இளைஞனின்  கண்களில் கண்ணீர்க் கண்ணாடி போல கோடிட்டது." மாஸ்டர்! ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் மறுத்து விடாதீர்கள்!" என்று எப்போதும் கெஞ்சாத அவன் கெஞ்சிய பொழுது , முகத்தை சற்றே இறுக்கமாய் வைத்து கொண்டு "சரி! சொதப்பாமல் விளையாடு!"என மட்டும் சொல்லி ஆடு களத்திற்குள் அவனை அனுப்பினார் .போர் களத்திற்குள் நுழையும் வீரன் போல சென்ற அவன் ஆடிய ஆட்டம்................அப்பப்பா சொல்லி மாளாது அன்று அவன் அணி 5-3என  வென்றது .அதில் அவன் அடித்த கோல்கள் 4,நம்புவதற்கு கஷ்டம் ஆனால் அது தான் உண்மை ,அவனை ஆறத் தழுவி மாஸ்டர் கேட்ட ஒரே கேள்வி ,"எப்படி மகனே இது உன்னால் முடிந்தது?" அதற்கு அவன் சொன்ன பதில்," இன்று தான் மாஸ்டர் நான் ஆடுவதை என் தந்தை பார்த்துக்கொண்டு இருந்தார் ."அவர் அவன் தந்தை எப்பொழுதும் அமரும்  இடத்தை பார்த்தால் அது வெறுமையாய் கிடந்தது ,"எங்கே உன் அப்பா ?" என்ன அவர் கேட்ட பொழுது அந்த வெற்றி நாயகனின் குரல் நடுங்கி,நா வறண்டு ,இதயம் வலிக்க ,"மாஸ்டர் என் தந்தைக்கு இரு கண்களும் தெரியாது அவர் இறந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது ..இன்று தன் அவர் என்னை சொர்க்கத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறார்.அதனால் நான் இன்று நன்றாக விளையாடினேன் "எனக்  கூறி விட்டு அவன் கோப்பையை தன் தந்தையின் கல்லறையின் முன் பக்குவமாய் வைத்தான் . அவன் தன் தந்தைக்கு வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும் ?

              "எவன் தெரியுமா நாத்திகன் ?கடவுளை நம்பாதவன் அல்ல நாத்திகன். தன்னை  நம்பாதவனே நாத்திகன்." என விவேகனந்தர் சொன்னது எவ்வளவு  உண்மை .?    நண்பர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தாயின்  மற்றும் தந்தையின் கண்ணீரிலும் ,வியர்வையிலும் குளித்தவர்கள் என்பதை நினைவில் கொண்டு  அவர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைக்க நீங்கள்  பயிலும் கல்வியில்  மாபெரும் வெற்றிகளை பெறுவிர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு என்றைக்கும் உண்டு.உங்கள்  மீது நம்பிக்கை வையுங்கள்  ,தாய் தந்தையின் உழைப்பை ஊக்க உரமாக்கி தடங்கலை தடங்களாக மாற்றி வெல்ல வாழ்த்துகள்.விடியும் என விண்ணை நம்பும் நீ, முடியும் என்று உன்னை நம்பு 

கனவு மெய்ப்பட  வேண்டும் .  வானம் வசப்பட வேண்டும்